ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.61.63 லட்சம் வசூல்: 188 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளியும் கிடைக்கப்பெற்றது!

 
srirangam

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவம்பர் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.61.63 லட்சம் ரொக்கப்பணம், 188 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கபெற்றுள்ளது.  

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சிறப்புக்குரியது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நம்பெருமாளை தரிசனம் செய்வர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி பொருட்களையும், உண்டியல் காணிக்கையையும் செலுத்துது வாடிக்கை. கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. 

srirangam hundial

அதன் படி, நவம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் கருடாழ்வார் சன்னதி அருகே நடைபெற்றது. இதில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, ஸ்ரீரங்கம் கோவில் மேலாளர் தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்கள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இறுதியாக நவம்பர் மாதம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.61 லட்சத்து 63 ஆயிரத்து 375 ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 188 கிராம் தங்கமும், 3 கிலோ 121 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது. அத்துடன் டாலர் உள்ளிட்ட 134 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தகவல் தெரிவித்துள்ளார்.