பெரம்பலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

 
perambalur

பெரம்பலூர் அருகே மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து  மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சிறுகுடல் கிராமம் ஆதி திராவிடர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை பூசாரி பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் கோவிலை திறக்க வந்தபோது, கோவில் வெளிப்புற கேட்டின் பூட்டு கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயர உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பல ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து, தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள், மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

police

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உண்டியல் கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் வரை பணம் இருந்திருக்க வாய்ப்புள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து, மாரியம்மன் கோவில் நிர்வாகி ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.