திருவள்ளுர் அருகே டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி - இருவர் கைது!

 
tvlr

திருவள்ளுர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.14 ஆயிரம் பணத்தை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளுர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தண்டலசேரி பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளி அன்று இக்கடையில் வியாபாரம் முடிந்து, பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், நள்ளிரவில் கடைக்கு வந்த 2 மர்மநபர்கள், கடையின் சுவரை துளைளிட்டு உள்ளே புகுந்தனர். பின்னர் கடைக்குள்ளே இருந்த மதுபாட்டில்களை திருடி மூட்டை கட்டியுள்ளனர். அத்துடன், கடையிலேயே அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

TVLR

இந்த நிலையில், அந்த பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கவரப்பேட்டை காவல் நிலைய போலீசார், கடையின் சுவரில் துளையிடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது, கடையின் உள்ளே இருவர் அமர்ந்து மது அருந்துவது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்கள் இருவரையும் துளையின் வழியே வெளியே வரவழைத்த போலீசார், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சென்னையை சேர்ந்த சதிஷ் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பதும், அவர்கள் கடைக்குள் புகுந்து மதுபானங்கள் மற்றும் பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களை போலீசார் பிடித்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.