அம்பாசமுத்திரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது... 131 பவுன் நகைகள் பறிமுதல்!

 
nellai

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையனை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவரிடமிருந்து ரூ. 48 லட்சம் மதிப்பிலான 131 பவுன் நகைகள் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பண்ணை சங்கரய்யர் நகரை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் கடந்த ஜூலை 14ஆம் தேதி இரவு மர்மநபர்கள் நகைகளை திருடி சென்றனர். இதேபோல், கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த ருபினா பர்வீன் என்பவரது வீட்டிலிருந்த நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க, திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சரவணன் உத்தரவின் பேரில், அம்பாசமுத்திரம் ஏடிஎஸ்பி பல்வீர் சிங் மேற்பார்வையில், அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைத்து, கொள்ளை நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் போஸ்ட் முகிலன் குடியிருப்பை சேர்ந்த சுடலைபழம் (44) என்ற ஒரே நபர்தான் 2 இடங்களிலும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கடந்த ஒரு ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்தது.

gold jewels

இதனை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சுடலைபழத்தை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ரகசிய தகவலின் பேரில் நேற்று காலை அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றிவந்த கொள்ளையன் சுடலைபழத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடமிருந்து ரூ.48 லட்சம்  மதிப்பிலான 131 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் போலீசாரின் விசாரணையில் சுடலைபழம் வள்ளியூர், நாங்குநேரி, மானூர் போன்ற பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

மேலும், கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இவர் மீது  45-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் சுடலைபழத்தை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.