காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய ஓய்வுபெற்ற ஆசிரியர்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு

 
wild elephant

கோவை மாவட்டம் பொன்னூத்து கிராமத்தில் ஒற்றை காட்டுயானையிடம் இருந்து நூலிழையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிர் தப்பிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது 

கோவை மாவட்டம் துடியலுர் அடுத்த வரப்பாளையம் அருகே உள்ள பொன்னூத்து கிராமம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கேரள எல்லையில் உள்ள இந்த கிராமத்திற்கு உணவு தேடி அடிக்கடி வனவிலங்குகள் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள் பொன்னூத்து கிராமத்திற்குள் புகுந்தது. பொன்னூத்து அம்மன் கோவில் பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமசாமி என்பவர், தகவல் அறிந்து தனது சோள தோட்டத்தில் வனவிலங்குகளிடம் பாதுகாக்க அமைக்கப்பட்ட மின் வேலியை செயல்படுகிறதா? என வீட்டின் முன் வந்து பார்த்துள்ளார்.

cbe

அப்போது ஒற்றை ஆண் யானை திடீரென அவரை தாக்க விரட்டியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் ராமசாமி யானையிடம் இருந்து தப்பியோடினார். இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் பட்டாசுகளை வெடித்து காட்டுயானையை விரட்டியடித்தனர். காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமசாமி உயிர் தப்பிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.