ஆடிப்பிறப்பை ஒட்டி ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை - மொத்த வியாபாரம் விறுவிறுப்பு!

 
textile market

ஆடி மாத பிறப்பையொட்டி, ஈரோடு ஜவுளி சந்தைக்கு கேரளா மற்றும் கர்நாடக மாநில மாநில வியாபாரிகள் அதிகளவில் வந்ததால், சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கமாகும். இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து மொத்த விலைக்கு ஜவுளியை கொள்முதல் செய்து செல்வர். விஷேச நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால் கடந்த மாதம் வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால், ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.

textile market

இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி ஜவுளிசந்தைக்கும் மீண்டும் வெளியூர் வியாபாரிகள் வரத் தொடங்கி உள்ளனர். இதனால் கடந்த 2 வாரங்களாக ஜவுளி சந்தையில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்ற வருகிறது. மேலும், ஒரு சில ரகங்களுக்கு ஆடித் தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளதால் சில்லரை விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய ஜவுளி சந்தை வியாபாரிகள், ஆடி பண்டிகை சீசன் விற்பனை கடந்த 2 வாரங்களாக தொடங்கி நடைபெற்று வருவதாகவும், இன்று கூடிய ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடைபெற்றதாக தெரிவித்தனர். 

இன்றைய சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் குவிந்ததால், மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றதாகவும் தெரிவித்தனர். மேலும், குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித் தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளதால், சில்லரை வர்த்தகம் அதிகமாக நடைபெற்றதாக கூறிய வியாபாரிகள், வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவை ஆடிப் பண்டிகை வரை தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினர். மேலும், ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் விசேஷம் உள்ளதால், காட்டன் துணிகள், காவி வேஷ்டி - சட்டைகள், துண்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வியாபாரிகள் கூறினர்.