ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை விறுவிறுப்பு!

 
textile market

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்ற நிலையில், வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாராம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை மொத்த விலையில் ஜவுளியை வாங்கிச் செல்வர். சந்தை நாட்களில் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். 

textile

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பின் எரிபொருள் விலை உயர்வு மற்றும் நூல் விலை ஏற்றம் காரணமாக வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.  இந்த நிலையில், நேற்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. எனினும் வெளி மாநில வியாபாரிகள் அதிகளவில் வராததால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து பேசிய வியாபாரிகள், ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றதாகவும், அதேவேளையில் ரம்ஜானையொட்டி வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வராததால் மொத்த வியாபாரம் 30 சதவீதம் மட்டுமே நடைபெற்றதாகவும் தெரிவித்தனர். மேலும், சேலை, வேட்டி, கைலிகள் மற்றும் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்டு சுடிதார் அதிகளவில் விற்பனையானதாக தெரிவித்தனர்.