ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பு!

 
textile market

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளி சந்தைக்கு புதிய ஜவுளி ரகங்கள் வரத்தாகிய நிலையில்,  சில்லரை வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திர உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்வர். ஜவுளி சந்தையில் சாதாரண நாட்களில் ரூ.1 கோடி வரையிலும், விஷேச நாட்களில் ரூ.5 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது. 

textile market

இந்த நிலையில், கேரளாவில் செப்டம்பர் 8ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி ஜவுளி சந்தைக்கு புதிய ஜவுளி ரகங்கள் வரத்தாகி உள்ளன. இதனால் நேற்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லறை வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.  ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி சந்தைக்கு கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். அதேவேளையில் மழையின் காரணமாக மற்ற வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் சுமாராகவே நடைபெற்றது. நேற்று நடந்த சந்தையில் சில்லறை வியாபாரம் 40 சதவீதமும், மொத்த வியாபாரம் 30 சதவீதமும் நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், அடுத்த வாரம் ஓணம் பண்டிகை நெருங்க உள்ளதால் ஜவுளி வியாபாரம் களைக்கட்டும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்