கோவை அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் புகைப்படங்கள் அகற்றம்!

 
ops

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் உருவ படங்களை அகற்றிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், அவற்றை உடைத்து தங்களது எதிர்ப்பை  வெளிப்படுத்தினர். 

சென்னையில் இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.  

ops

இந்த நிலையில், கோவை அண்ணா சாலையில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் உருவ படத்தை, 10-க்கும் மேற்பட்ட எடப்பாடி பழனிசாமியின் அகற்றினர். பின்னர், கட்சி அலுவலக வாயிலில் அவற்றை உடைத்தும், காலணியால் அடித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், கட்சியை முடக்கும் விதமாக செயல்பட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கண்ட முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.