மலைப்பாதையில் கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி சுமந்து சென்ற உறவினர்கள்... சாலை வசதி இல்லாததால் தொடரும் அவலம்!

 
udumalai

உடுமலை அருகே பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை, உறவினர்கள் தொட்டில் கட்டி கரடுமுரடான மலைப்பாதை வழியே மருத்துவமனைக்கு துக்கிச்சென்ற சம்பவம் குறித்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குழிப்பட்டி செட்டில் மெண்ட் பகுதி உள்ளது. இங்கு மலை புலையர் பழங்குடியின இனத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர்.  மேலும், நோயாளிகளை தொட்டில் கட்டி சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை உள்ளது. 

udumalai

இந்த நிலையில், குழிப்பட்டி செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த விஜயன். இவரது மனைவி சரண்யா(29),  4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கிராமத்தினர் முடிவு செய்தனர். ஆனால் மலைக் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் குழிப்பட்டியில் இருந்து மலையின் கீழே உள்ள பொன்னாலம்மன் சோலை பகுதிக்கு தொட்டில கட்டி துக்கிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து, கணவர் விஜயன், அவரது உறவினர் நாகப்பன் ஆகியோர் மூங்கிலில் தொட்டில் கட்டி அதில் சரண்யாவை அமரச்செய்து, கரடு முரடான மலைப் பாதையின் வழியியே பொன்னாலம்மன் சோலைக்கு சுமந்து சென்றனர். தொடர்ந்து, அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் சரண்யாவை ஏற்றி உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.