தூத்துக்குடியில் 2 நபர்களிடம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.3.20 லட்சம் மீட்பு!

 
tuti

தூத்துக்குடியில் 2 நபர்களிடம் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.3.20 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்தவர் ஜோன்ஸ். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதை சரிசெய்ய கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் ஜோன்ஸ் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து, தனது வங்கிக்கணக்கு விபரங்கள் மற்றும் ஓடிபி ஆகியவற்றை பதிவு செய்துள்ளார்.  சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,24,500 பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஜோன்ஸ்  இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

tuti
 
இதேபோல் தூத்துக்குடியை சேர்ந்த மற்றொரு நபருக்கு, செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் அவருக்கு அமேசானில் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், அந்த பரிசை பெற ரூ. 25,000 பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கை கிளிக் செய்து அவர் தனது  கிரெடிட் கார்டு விபரங்களை அளித்தபோது, அவரது கிரெடிட் கார்டில் இருந்து  ரூ. 4,38,238 பணம் திருடப்பட்டு உள்ளது.  இதுகுறித்து அவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இருவரது புகார்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்ட விசாரணையில், ஜோன்ஸ் இழந்த பணம் அவரது வங்கி மூலம் பிரபல இணையதளத்தில் பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு, ஆர்டர ரத்து செய்யப்பட்டு ரூ.99,500 பணம் மீட்கப்பட்டது. அதேபோல், மற்றொரு நபர் இழந்த பணம் அவரது கிரெடிட் கார்டு மூலம் பிரபல இணையதளத்தில் பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டறியப்பட்டு, அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டு மனுதாரருடைய ரூ. 2,20,295 பணம் மீட்கப்பட்டது. இரு வழக்குகளிலும் மீட்கப்பட்ட ரூ. 3.20 லட்சம் பணத்தை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து எஸ்பி பாலாஜி சரவணன்,  நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார்.