சென்னிமலை அருகே ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது... 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

 
arrest

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வடமாநிலத்தவருக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி பதுக்கிய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்பி பாலாஜி உத்தரவின் பேரில், ஆய்வாளர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் போலீசார் சென்னிமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னிமலை அடுத்த கூரபாளையம் பேருந்து நிலையம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

சென்னிமலை அருகே இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

அப்போது, அங்கு 25 மூட்டைகளில் இருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் ரேஷன் அரிசியை பதுக்கியது சென்னிமலை அடுத்த மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா (50) என்பது தெரிய வந்தது. மேலும், ரேஷன் அரிசியை பதுக்கிவைத்து வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் ராஜாவை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.  

இதேபோல், ஈரோடு கருங்கல்பாளையம் சங்க நகர் பகுதியில் ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு 1,550 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 1,550 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.