ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மூவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

 
ramnad

மணல் கடத்தலில் ஈடுபடுவதாக போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சிங்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பூமி ராஜன், பிரபாகரன், ஹரிகரன். இவர்கள் இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது, திடீரென தாங்கள் கேன்களில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று அவர்களிடம் இருந்த மண்ணெண்ணை கேன்களை பறித்து 3 பேரை காப்பாற்றினர். இதனை தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ramnad 
அப்போது, தாங்கள் 3 பேரும் கூலி விவசாய வேலை செய்து வருவதாகவும், இந்த நிலையில் தேவிபட்டினம் போலீசார் மற்றும் ராமநாதபுரம் டிஎஸ்பி ஆகியோர், தங்கள் மீது மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி அடிக்கடி பொய் வழக்கு பதிவுசெய்து, தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தனர். இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து, போலீசார் 3 பேரையும் விசாரணைக்காக கேணிக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.