ஊத்துக்குளி அருகே கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்... அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் ஆய்வு!

 
perundurai

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே மழைநீரால் சூழப்பட்ட குடியிருப்புகளை பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.  

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரைப்பாளையம், சின்ன குட்டை பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. ஊத்துக்குளி பேரூராட்சி பகுதியில் பெய்த மழைநீர் உரிய வடிகால் இல்லாததால் இந்த பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து தற்காலிகமாக சாலையில் பள்ளம் தோண்டி மழைநீர் வெளியேற்றப்பட்டது.

peru

இந்த விவகாரம் குறித்து மாவட்ட கவுன்சிலரும், அதிமுக ஊத்துக்குளி தெற்கு ஒன்றிய செயலாளருமான சக்திவேல், பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு, மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட கரைப்பாளையம் கிராமத்திற்கு இன்று பெருந்துறை எம்எல்ஏவும், சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழு உறுப்பினருமான எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன்,  தனசேகரன், ப விஜயன் என்கிற ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள் ராமசாமி, பொருளாளர் கேபிஎஸ் மணி, இலக்கிய அணி கருப்பசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் மெக்கானிக் மோகன், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.