டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை - நாமக்கல் ஆட்சியர்!

 
namakkal

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய தேவையில்லை என்று ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த நன்செய் இடையார் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம காய்ச்சலால் 3 வயது சிறுமி சிவதர்ஷினி உயிரிழந்தார். இதனை அடுத்து, நேற்று சுகாதாரத்துறையினர் நன்செய் இடையாறு கிராமத்தில் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கூறியதாவது: - நன்செய் இடையாறு கிராமத்தை மூன்றரை வயது சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அச்சிறுமிக்கு டெங்கு காய்ச்சலுக்கான ஆய்வக பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு காய்ச்சல் இல்லை என தெரியவந்துள்ளது. வைரஸ் காய்ச்சலினால் தாக்கம் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

dengue

இதனை தொடர்ந்து, இப்பகுதியில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை மூலம் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை மாலை இரு நேரங்களிலும் புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு  காய்ச்சல் நோயாளிகள் உள்ளனரா? என பரிசோதனை மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் மருத்துவ முகாமில் 2 நபர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் பற்றி பீதி அடைய தேவை இல்லை.

தற்போது பருவநிலை மாற்றத்தால் பல்வேறு இடங்களில் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் வீடுகளில் உள்ள குடிநீர் பாத்திரங்கள், தொட்டிகள், மன்பானைகளில் கொசு புகாத வண்ணம் நன்கு மூடிவைத்து பராமரிக்க வேண்டும். கொசு புழுக்கள் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீரை கவிழ்த்து கொசு புழுக்களை அழித்துவிட வேண்டும். மேலும், தங்கள் வீடுகளில் அல்லது பகுதிகளில் காய்ச்சல் எவருக்கேனும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் அறிகுறி கண்டவுடன் உடனடியாக சென்று சிகிச்சை பெற வேண்டும். இதனால் நோயின் தாக்கத்திலிருந்து தவிர்க்க முடியும். தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் 3 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்காமல் கொசு புகாத வண்ணம் மூடி வைத்து பராமரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

namakkal

மேலும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க 15 வட்டாரங்களிலும் 318 கொசு ஒழிப்பு பணியாளர்களும், பேரூராட்சி பகுதிகளில் 190 கொசு ஒழிப்பு பணியாளர்களும் நகராட்சியில் 295 கொசு ஒழிப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை மருந்து தெளிக்கப்பட்டு புகை மருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் கலையரசு, மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.