தென்காசியில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்!

 
vehicles

தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 298 மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுவதாக, எஸ்பி சாம்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 293 இருசக்கர மோட்டார் வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 4  நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 298 வாகனங்களுக்கு பொது ஏலம் விடப்படுகிறது. 30.01.2023 மற்றும் 31.01.2023 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கரன்கோவில் பழைய தாலுகா காவல் நிலைய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது. இதில் கலந்துகொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வாகனங்களை சங்கரன்கோவில் பழைய தாலுகா காவல்நிலைய வளாகத்தில் 23.01.2023 முதல் 27.01.2023 வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம்.

tenkasi ttn

மேலும், தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ.1000/- முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளான 30.01.2023 அல்லது 31.01.2023 தினத்திலேயே ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும், என எஸ்பி சாம்சன் தெரிவித்துள்ளார்.