தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு... குடும்ப அட்டையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கிராம மக்களால் பரபரப்பு!

 
erode

அந்தியூர் அருகே விதிகளை மீறி செயல்படும் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கிராமமக்கள் குடும்ப அட்டைகளை ஓப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் வெளியே புறப்பட சென்ற ஆட்சியரை, அந்தியூரை அடுத்த கொமராயனுர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை கையில் ஏந்தியபடி சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அந்த மனுவில், கொமராயனூர் கூப்புகாடு பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும், இந்த குவாரியால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், கால்நடைகள் மற்றும்  விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

erode

குவாரியில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தி வெடிவைத்து தகர்க்கப்படும்போது கற்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள விவசாய நிலங்களிலும், வீடுகளின் மீது விழுவதாகவும், இதனால் ஆழ்துளை  கிணறுகள் அதிர்ந்து மூடிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.  மேலும், அரசின் நிபந்தனைகளை மீறி கல்குவாரி செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினால், விவசாயிகளுக்கு மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ள கிராம மக்கள், கற்கள் விழுந்து உயிர், பொருள் சேதம் ஏற்பட்டால் அரசே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

எனவே இந்த விவகாரத்தில் ஆட்சியர் தலையிட்டு கல்குவாரிக்கு  வழங்கிய உரிமத்தை ரத்து செய்து, எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள்,  கோரிக்கைகள்  நிறைவேற்றாவிட்டால் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.