அருப்புக்கோட்டையில் ஜனவரி 28-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

 
virudhunagar

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வரும் 28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் ஆகிய கல்வி தகுதியுடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

vnr

வரும் 28-ஆம்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசமானது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடுநர்கள் இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.