அரியலூரில் வரும் 28ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

 
collector ariyalur

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக, ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், அரியலூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற  28.01.2023 சனிக்கிழமை அன்று  மகிமைபுரம்,  மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்  காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

jobs

18 வயது முதல் 35 வயது வரையிலான 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL)மூலம் ஆலோசனைகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகம் என தனித்தனி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

எனவே இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மேற்கண்ட தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 04329 - 228641 அல்லது 9499055914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு, ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.