திண்டுக்கல்லில் வரும் 20-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

 
dindigul

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 20ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பு துறையால் தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். எனவே இம்முகாம் ஜனவரி 2023-ஆம் மாதத்தில் 20.01.23 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளிநகல் (ஜெராக்ஸ்)-களுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் செயல்பத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

jobs

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்போர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழில் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. எனவும், அரசு துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இம்முகாமில் கலந்துகொள்ளும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் பதிவில் விடுபாடுகள் மற்றும் குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக சரிசெய்து தரப்படும். இவ்வேலைவாய்ப்பு முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.