வாழப்பாடி அருகே தனியார் கல்லூரி பேருந்து - கார் மோதல்; மென்பொறியாளர் பலி!

 
accident

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மென்பொறியாளர் உயிரிழந்தார்.

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ. தம்பதியினர் இருவரும் கோவைக்கு சென்றுவிட்டு காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை ராஜேஷ்குமார் ஓட்டினார். இன்று காலை சேலம் மாவட்டம் வாழடிப்பாடி அருகே புதுப்பாளையம் ஆத்துமேடு மேம்பாலத்தில் சென்றபோது காரின் மீது எதிரே சேலம் நோக்கி வந்த தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ராஜேஸ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

vazhapadi

மேலும், சுபஸ்ரீ பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி போலீசார், காயமடைந்த சுபஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.