வேடச்சந்தூர் அருகே தனியார் நூற்பாலை பேருந்து - ஆட்டோ மோதல்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே தனியார் நூற்பாலை பேருந்தின் மீது ஆட்டோ மோதி விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் நாகராஜ். ஆட்டோ ஓட்டுநர். சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் எரியோட்டில் இருந்து வேடச்சந்தூருக்கு சவாரி சென்றிருந்தார். பின்னர் தனது நண்பர் சந்தோஷ் (23) உடன் எரியோட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். இரவு 8.15 மணி அளவில் வேடச்சந்தூர் அடுத்த பூத்தாம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் நூற்பாலை பேருந்தின் மீது ஆட்டோ அதிவேகமாக மோதியது.

accident

இந்த விபத்தில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடச்சந்தூர் போலீசார், காயமடைந்த சந்தோஷை மீட்டு சிகிச்சைக்காக வேடச்சந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், பலியான நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நூற்பாலை பேருந்து ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.