வேலூர் மத்திய சிறையில் கைதி திடீர் மரணம்!

 
dead

வேலூர் மத்திய சிறையில் திருட்டு வழக்கில் அடைக்கப்பட்டிருந்த கைதி நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கார்த்திகேயபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது பாஷா(33). இவர் சமீபத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக குடியாத்தம் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கடந்த 13ஆம் தேதி முகமது பாஷாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அடுத்து, அவருக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக்கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

vellore gh

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முகமது பாஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.