கோவை மத்திய சிறையில் கைதி மரணம்!

 
cbe jail

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகையை சேர்ந்த விசாரணை கைதி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் விளத்தொட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் என்கிற சரவணன் (49). இவர் சமீபத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்த சரவணனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, சிறைக்காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனி வார்டில் அனுமதித்தனர்.

coimbatore gh

அங்கு அவருக்கு மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சரவணன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.