பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டம்; வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வலியுறுத்தல்!

 
theni collector

தேனி மாவட்டத்தில் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 12-வது தவணை நிதியை பெற விவசாயிகள் தங்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டமானது 2018ஆம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கி வருகிறது.

இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணை தொகைகள் வரபெற்றுள்ளன. தற்போது 12  வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தற்போது திட்டப்பயனாளிகளின் நில ஆவணங்கள், தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

paddy farm

எனவே இத்திட்டத்தில் நிதியுதவி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களை (பட்டா) அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காண்பித்து, சரி செய்து கொண்டால் மட்டுமே அடுத்த  தவணை தொகை கிடைக்கப்பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தகுதியான விவசாயிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து நில ஆவணங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால், தகுதியான விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவும், PM-KISAN வலைதளத்தில் e-KYC-ஐ பதிவேற்றம் செய்திடுமாறு ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.