திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரபாகரன் பொறுப்பேற்பு!

 
tiruppur

திருப்பூர் மாநகரில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த ஏ.ஜி. பாபு சமீபத்தில் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய காவல் ஆணையராக பிரபாகரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று காலை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பிரபாகரன் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் பிரபாகரன், திருப்பூர் மாநகரில் கஞ்சா பயன்பாடு அதிகளவில் உள்ளதாகவும், இதனால் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் பெறப்பட்டு உள்ளது.

tiruppur

எனவே, கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க முக்கியத்துவம் அளித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும், திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை ஆய்வுசெய்து, அதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். இதேபோல், தடை செய்யப்பட்ட லாட்டரி, குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய ஆணையர் பிரபாகரன், ஆன்லைன் மூலம் மோசடிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்