மனைவி பிரிந்து சென்றதால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை... சேலம் அருகே சோகம்!

 
suicide

சேலம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள வெள்ளாளபுரத்தை சேர்ந்தவர் பிரபு (30). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பிரபுவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை மனைவி சங்கீதா கண்டித்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் சங்கீதா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் பிரபு மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்த தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். 

salem

இதனை தொடர்ந்து, நேற்று காலை சங்கீதாவுக்கு செல்போனில் பேசிய அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா, உறவினர்களுக்கு தகவல் அளித்துவிட்டு, வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, பிரபு வீட்டில் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.