திண்டுக்கல்லில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு!

 
veterinary

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை திண்டுக்கல் மண்டல இணை இயக்குநர் முருகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  திண்டுக்கல் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 66  கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நேர்காணல் வழி நிரப்பிட பணி மேற்கொள்ளப்பட்டது.

dindigul

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு அப்பதவிகளுக்கு மே 4 முதல் மே 10 வரையிலான நாட்களில் நேர்காணல் நடத்தப்படவிருந்த நிலையில், சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையர் அவர்களின் மின்னஞ்சல் கடித வழி மேற்கண்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவியின் நேர்காணல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாக காரணங்களால்  உடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவிருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர்  பதவிக்கான நேர்காணல் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், நேர்காணல் தேதி தேர்வாளர்களுக்கு  பின்னர் தெரிவிக்கப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.