காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் வினியோகம் - ஆட்சியர் ஆர்த்தி தகவல்!

 
vinayagar chaturthi - Kanchipuram Collector Aarthi

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 9ஆம் முதல் வழங்கப்பட உள்ளதாகவும், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள நாளில் தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் 3,93,204 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1,000/- (ரூபாய் ஆயிரம்) ரொக்கப்பணம்  வழங்கும் பணி 09.01.2023 முதல் வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வருகை புரிவதை தவிர்ப்பதற்காக ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

kanchipuram

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விடுதலின்றி விற்பனை முனைய இயந்திரம் மூலம் கைரேகை சரிபார்ப்பு முறை மூலம் வழங்கப்படும். அங்கீகாரச்சான்று பெற்றுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பதிவேட்டில் கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வேண்டுமானாலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணத்தை டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும நேரத்தில் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பொங்கல் பரிசு தொகுப்பு சம்பந்தப்பட்ட தகவல் / புகார் ஏதேனும் இருப்பின் அதனை 044 27238225, 9043046100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.