பொங்கல் பண்டிகை : கோவையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
bus strike

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் கூட்ட நெரிசலை சமாளிக்க கீழ்கண்டவாறு பேருந்து நிலைய மாற்றங்கள் செய்ய ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைக்கட்டி, சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், புதிய பேருந்து நிலையம் மேட்டுப்பளையம் சாலையில் இருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் மார்க்கமாக செல்லும் பேருந்து இயக்கப்பட உள்ளன.

bus

மேற்கூறிய தற்காலிக ஏற்பாடானது நாளை முதல் வரும் 14ஆம் தேதி இரவு அதிகாலை கூட்டம் முடியும் வரை  செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்து வசதியும் கீழ்கண்டவாறு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோவை - மதுரை மார்க்கத்தில் 100 பேருந்துகளும், கோவை - தேனி மார்க்கத்தில் 40 பேருந்துகளும், கோவை - திருச்சி மார்க்கத்தில் 50 பேருந்துகளும், கோவை - சேலம் மார்க்கத்தில் 50 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 

மேலும், மேற்கண்ட அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் காந்திரபுரம், நகர பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள இயக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.