குமரியில் பொங்கல் விழா - கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்த ஆட்சியர், எஸ்பி!

 
kumari

குமரி மாவட்டம் சந்தையடி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆட்சியர் அரவிந்த், எஸ்.பி கிரண் பிரசாத் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். 

குமரி மாவட்டம் சந்தையடி கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நேற்று 56-வது பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட எஸ்பி கிரண் பிரசாத் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைத்தனர்.  இந்த பொங்கல் விழாவில் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா உள்பட 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து, கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

kumari

இந்த விழாவில், பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளான கிரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பாட்டம், மகுட ஆட்டம்,  சிலம்பாட்டம், பரதநாட்டியம்,  வில்லுப்பாட்டு, கணியான்கூத்து, ஒயிலாட்டம் ஆகியவை நடைபெற்றன. மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு  பொங்கல் தயாரித்தல், கோலப்போட்டி, இசை நாற்காலி மற்றும் கபடி போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு  சான்றிதழ்களை ஆட்சியர் அரவிந்த் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் கௌசிக், உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், நாகர்கோவில் ஆர்.டி.ஓ சேதுராமலிங்கம், மாவட்ட சுற்றலா அலுவலர் சதிஷ்குமார் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.