கோவை மாவட்டத்தில் திருட்டுபோன 106 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்!

 
sp cbe

கோவை மாவட்டத்தில் திருட்டு போன மற்றும் பொதுமக்கள் தவறவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 106 செல்போன்கள் மீட்டனர். மீட்கப்பட்ட போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் கலந்துகொண்டு செல்போன்களை அதன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., பத்ரிநாராயணன், கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 350 சொல்போன்கள் கண்டுபிடித்து, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், மாதம் 100 செல்போன்களை ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். கடந்த 4 மாதங்களில் போக்சோ வழக்குகளில் 149 வழக்குகளுக்கு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், 9 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளதாகவும், 60 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதாவும் தெரிவித்தார்.

cbe

இதேபோல், பள்ளிக்கூடம் திட்டம் மூலம் போலீசார் 28 நாட்களில் 36 ஆயிரம் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்த எஸ்பி பத்ரிநாராயணன், அவர்களில் 12 ஆயிரம் பேர் 10 வயதிற்கும் குறைவானவர்கள் என தெரிவித்தார்.  இந்த திட்டம் மூலம் 2 குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், குட்கா விற்பனை தொடர்பாக 332 வழக்குகள் பதிவுசெய்து, 347 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் 3.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், 125 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர்,  கடந்த 4 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 126 வழக்குகள் பதிவுசெய்து, 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கைதுசெய்யப்பட்ட 5 பேர் மீது விரைவில் குண்டர் சட்டம் பாயும் எனவும் தெரிவித்தார். வலி நிவாரணி மருந்துகளை போதைக்கு பயன்படுத்துவது தொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மருத்துவர் சீட்டு இல்லாமல் யாருக்கும் பலி நிவாரணி மருந்துகளை  மெடிக்கலில் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

cbe SP

கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் குற்ற வழக்குகள் தொடர்பாக 311 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ரூ.1.51 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சாலை விபத்துக்கள் 10 சதவீதமாக குறைந்து உள்ளதாக கூறிய எஸ்பி பத்ரி நாராயணன், கடந்த 5 ஆண்டுகளில் 2 முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்திய 714 பேர் கண்டறியப்பட்டு, அதில் 286 கனரக வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.