திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் மாயம்; 2-வது நாளாக தேடுதல் பணி தீவிரம்!

 
tri

திருச்சி சிந்தாமணி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்த அரசுப்பள்ளி மாணவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மகன் முகேஷ்குமார் (16). இவர் மரக்கடை சையது முதுர்ஷா அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து முகேஷ்குமார், திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள காவிரி படித்துறைக்கு சென்றுள்ளார். அங்கு தனது பேக் மற்றும் உடைகளை வைத்துவிட்டு காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளார்.

drowned

அப்போது அதிகளவில் தண்ணீர் சென்றதால் எதிர்பாராத விதமாக முகேஷ்குமார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் கோட்டை காவல் நிலையம் மற்றும் கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு  தகவல் அளித்தனர். அதன் பேரில், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி தேடினர். நேற்று இரவாகியதால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, இன்று காலை முதல் மீண்டும் தேடுதல் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளதால் காவிரியில் அதிகளவு தண்ணீர் செல்லும் நிலையில் மாணவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தன்று பள்ளி மாணவர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் திருச்சி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.