குடியாத்தத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் தொல்லை... தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டிங் பட்டறை தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 16 வயது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவிக்கு குடியாத்தத்தில் வெல்டிங் பட்டறையில் வேலை செய்யும் செருவங்கியை சேர்ந்தவர் பிரதீப்(23) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. அப்போது, மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிரதீப் அவருக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

gudiyatham

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது, கர்ப்பத்துக்கு பிரதீப் தான் காரணம் என தெரியவந்தது.

இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் அவர் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் பிரதீப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.