திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் பலி!

 
manachanallur

திருச்சி மாவட்டம் நொச்சியம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் குளித்த பிளஸ் 2 மாணவர் நீரில் மூழ்கி  பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் புதுக்காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் - செல்வி தம்பதியினர். இவர்களது மகன் சுதர்சன்(18). இவர் மணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், விடுமுறை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சுதர்சன், நண்பர்களுடன் நொச்சியம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். ஆற்றில் இறங்கி குளித்தபோது,  எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சுதர்சன் தண்ணீரில் முழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

manachanallur

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடியபோது, மயங்கிய நிலையில் சுதர்சனை மீட்டனர். தொடர்ந்து, சிகிச்சைக்காக மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சுதர்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை அடுத்து, மணச்சநல்லூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.