ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பிளஸ் 1 மாணவர் பலி... திருச்சி அருகே சோகம்!

 
dead body

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் படுகாயமடைந்த பிளஸ் 1 மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரது மகன் மருதுபாண்டி (16). இவர் திருச்சி மாவட்டம் மாத்தூர் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மருதுபாண்டி கடந்த சில நாட்களுக்கு முன் இனாம் மாத்தூரில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வீட்டில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைக்கு புல் கொடுக்க சென்றபோது, எதிர்பாராத காளை மாடு மருதுபாண்டியை முட்டியது. இதில் அவரது விலா எலும்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

trichy gh

இதனை அடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.  அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மருதுபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை பழனிசாமி புகாரின் அடிப்படையில் ராம்ஜி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.