பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு!

 
mla office

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை 12 ஆண்டுகளுக்கு பின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பங்களாவீதியில் கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த அலுவலகம் திறக்கப்படாமல், பராமரிப்பின்றி இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஆக எஸ். ஜெயக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சட்டமன்ற அலுவலகத்தை புதுப்பித்து தருமாறு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக சட்டமன்றத்திலும் கோரிக்கை வைத்த நிலையில், எம்எல்ஏ அலுவலகம் பொதுப்பணித்துறையால் புனரமைக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. 

mla office

இதனை அதிமுக முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன், பெருந்துறை எம்எல்ஏவும், சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழு உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார்  ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தனர். அப்போது பேசிய எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார், நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எம்எல்ஏ அலுவலகம் இயங்கும் என்றும், பொதுமக்கள்  சட்டமன்ற உறுப்பினரை 85089 44444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும், அலுவலகத்தில் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வந்த எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமாரை ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.