பச்சமலை ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம்; 358 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் கார்மேகம்!

 
pachamalai

சேலம் மாவட்டம் பச்சமலை ஓடைக்காட்டுபுத்தூர் மலைக்கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் 358 பயனாளிகளுக்கு ரூ.26.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

சேலம் மாவட்டம் பச்சமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடைக்காட்டுபுத்தூர் மலைக்கிராமத்தில் நேற்று மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து,  வருவாய் துறை, வேளாண் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 358 பயனாளிகளுக்கு ரூ.26.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

தொடர்ந்து மலைக்கிராம மக்களிடையே பேசிய ஆட்சியர் கார்மேகம், பச்சமலை ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இம்முகாமில் பச்சமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடைக்காடு, ஓடைக்காட்டு புதூர், மயில குளம், மாயம்பாடி, வெள்ளேரிக்காடு உள்ளிட்ட  25 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் அதிகாரிகள் நேரடியாக சென்று, களஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என கூறினார்.

pachamalai

மேலும், சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதனை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார். இன்றைய மக்கள் சந்திப்பு முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் ஓடைக்காட்டு புத்தூர்  உண்டு உறைவிட உயர் நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கார்மேகம், பள்ளியை தூய்மையாகவும், மாணவர்களுக்கு அதிக செயல்முறை விளக்கங்களுடன் கல்வி கற்பிக்க வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உணவு பொருட்களின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.