கல்லூரி கட்டணம் செலுத்த சிரமப்பட்ட பெற்றோர்... வேதனையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). கூலி தொழிலாளி. இவரது மகள் பாப்பா (18). இவர் நெல்லை பொன்னாக்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கூலி தொழிலாளியான முத்துக்குமார், தனது மகளின் கல்விக் கட்டணத்தை மிகவும் சிரமப்பட்டு கட்டியதாக கூறப்படுகிறது. தந்தையின் சிரமத்தை எண்ணி பாப்பா மன வேதனையில் இருந்துள்ளார்.

nellai gh

இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை முத்துக்குமாரும், அவரது மனைவியும் வெளியே புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த பாப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பின் வீட்டிற்கு வந்த முத்துக்குமார், மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்த களக்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவி பாப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், தனது படிப்பு செலவிற்காக பெற்றோரை மிகவும் சிரமப்படுத்தி விட்டதால் வேதனையில் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்