பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதி மரணம்!

 
dead

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் புளியரை கற்குடி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (33). லாரி ஓட்டுநர். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு கற்குடி பகுதியில் சாலையில் சென்ற ஆட்டோ மீது லாரியை மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் செங்கோட்டை அடுத்த லாலாகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக புளியரை போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், மீன்பாசி ஏலம் தொடர்பான பிரச்சினையில் உதயகுமார், லாரியை மோதி 6 பேரை கொலை செய்தது தெரிய வந்தது.

nellai gh

இதனை அடுத்து, போலீசார் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த உதயகுமார், தனக்கு எதிராக சாட்சியளித்ததாக, கற்குடியை சேர்ந்த ஹரிகரன் என்பவரை கொலை செய்தார். இந்த வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த அவர் மீண்டும் ஜாமினில் வெளியே வந்தபோது தலைமறைவானார். அவரை கடந்த ஜூலை மாதம் போலீசார் பிடித்து, பாளைங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் உதயகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, சிறைக்காவலர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு உதயகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.