பழனி வைகாசி விசாக திருவிழா ஜுன் 6-ல் தொடக்கம்!

 
palani

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா  ஜுன் 6ஆம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், முருக பெருமானின் 3ஆம் படைவீடாக திகழ்ந்து வருகிறது. இக்கோவில் திருவிழாக்களில் வைகாசி விசாகம் முக்கிய திருவிழாவாக கருதப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு வைகாசி விசாகம் திருவிழா வரும் ஜுன் 6ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கடக லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

palani

10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வள்ளி - தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், ஜூன் 11ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தனுர் லக்னத்தில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

தொடர்ந்து, மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்,  ஜூன் 12ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.