கடன் தொல்லையால் பெயிண்டர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை... திருப்பூரில் சோகம்

 
dead

திருப்பூரில் கடன் தொல்லையால் பெயிண்டர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன்(45). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், ராஜேஷ் கண்ணன் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.1.25 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக மாதந்தோறும் தவணையும் கட்டி வந்துள்ளார். இந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் கடந்த சில மாதங்களாக தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்தில் வட்டியாக ரூ.2 லட்சம் கட்ட வற்புறுத்தியாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ் கண்ணன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். 

tirupur Gh

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பூர் கூலிப்பாளையம் ரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்ற அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், ராஜேஷ் கண்ணன் தற்கொலை செய்வதற்கு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அழுத்தம் கொடுத்ததே காரணம் என கூறி அவரது உறவினர்கள் நேற்று அவினாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர உதவி காவல் ஆணையர் சுனில்குமார், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  அப்போது, இந்த சம்பவத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதித அளித்தார். அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.