கத்தியை காட்டி மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை - பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!

 
ranipet

ராணிப்பேட்டை அருகே 14 வயது சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம் ஹாஜிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சலீம் பாட்ஷா(21). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவரது மனைவி பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால்  சலீம் பாட்ஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண் அவருக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பெண்ணின் 14 வயது பேத்தி, அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தார்.

pocso

அப்போது, சலீம் பாட்ஷா, கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறினால், கொன்றுவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு நிகழ்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சலீம் பாட்ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.