"பி.எம். கிசான் திட்டம்; ஆதார் விபரங்களை வரும் 31-க்குள் பதிவேற்ற வேண்டும்"- திருவாரூர் ஆட்சியர் அறிவுறுத்தல்!

 
tvr

திருவாரூரில் பிஎம் கிசான் திட்ட வலைதளத்தில் விவசாயிகள் ஆதார் விபரங்களை ஜுலை 31ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்தால் மட்டுமே, திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு 12-வது தவணை விடுவிக்கப்படும் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது:-  திருவாரூர் மாவட்டத்தில் ஜுலை மாதம் இயல்பான மழையளவு 72.74 மி.மீ. ஆகும். நடப்பாண்டில் ஜுலை மாதத்தில் 80.41 மி.மீ மழை பெறப்பட்டது. நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 23,950 கனஅடி நீர் வருந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 24,714 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

திருவாருர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 60 ஆயிரம் ஏக்கரிலும், சம்பா, தாளடி பருவத்தில் 1,46,500 ஹெக்டேரிலும், கோடை சாகுபடி 9,500 எக்டேரில் ஆக மொத்தம் 1,92,000 எக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் குறுவை பருவத்தில் 33,605 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 79,128 ஏக்கரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 23,355 ஏக்கரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 1,36,088 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 28,912 ஏக்கரில் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான நாற்றாங்கால், செம்மை நெல் சாகுபடி முறையில் 791.3 ஏக்கரிலும், சாதாரண நடவு முறையில் 2,335.5 ஏக்கரிலும் இருப்பு உள்ளது. மேலும், 490.2 ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு தேவையான நாற்றாங்கால் எதிர்பார்க்கப்படுகிறது.

farmers

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பயனடைய, விவசாயிகள் தங்கள் ஆதார் விபரங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 58,973 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் தகுதியான விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க PM KISAN வலைதளத்தில் e-KYC -ஐ பதிவேற்றம் செய்வது அவசியமாகிறது. எனவே வரும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையுள்ள காலத்திற்கான 12-வது தவணையை பெற தங்கள் ஆதார் விபரங்களை உறுதி செய்தல் வேண்டும்

ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவாயிகள் www.pmkisan.gov.in என்ற வலைதளத்தில் தங்களின் ஆதார் எண் விபரத்தை பதிவிட்டால், அதில் ஓடிபி., எண் மொபைலுக்கு வரும். அதை பதிவு செய்தால் விபரங்கள் சரிபார்க்கப்படும். இதுவரை ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்து தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்ய  அறிவுறுத்தப்படுகின்றனர்.பிஎம் கிசான் திட்ட வலைதளத்தில் விவசாயிகள் ஆதார் விபரங்களை ஜுலை 31ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்தால் மட்டுமே, திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு 12-வது தவணை விடுவிக்கப்படும் என தெரிவித்தார்.