கந்திலி அருகே எருதுவிடும் விழா - 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

 
tpr

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற எருது விடும் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள தோக்கியம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 69-வது ஆண்டு எருது விடும் விழா இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியை வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். 

bull taming

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், காளைகள் மின்னல் வேகத்தில் பந்தைய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது, பாதையின் இருபுறமும் திரண்டு நின்ற மாடுபிடி வீரர்கள் காளைகளை தீரமுடன் எதிர் கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 60,001-ம், இரண்டாம் பரிசு 50,001-ம் வழங்கப்பட்டது. இந்த போட்டியை திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.