விழுப்புரத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்... ஆட்சியர் மோகன் நேரில் அஞ்சலி!

 
organ donation

விழுப்புரத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட 8  உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள கக்கனுர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(34). கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த புதன் கிழமை அன்று சந்தோஷ் விழுப்புரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து, சந்தோஷ் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார்.

vpm

இதனை அடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். இதனை தொடர்ந்து, நேற்று அதிகாலை அரசு மருத்துவமனை முதல்வர் குந்தவி தேவி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சந்தோஷின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவி விழிகள், நுரையீரல் உள்ளிட்ட 8 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அவை பின்னர் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளது.

உடல் உறுப்புகளை தானம் செய்த சந்தோஷின் உடலுக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவரது மனைவி புவனேஷ்வரியிடம் உடல் உறுப்பு தானம் செய்ததற்கான சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.