சென்னிமலையில் குடியிருப்பு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு... கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

 
tasmac

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் குடியிருப்பு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னிமலை அருகே உள்ள ஒட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், தாங்கள் ஓட்டப்பாறை காளிகோய் டெக்ஸ் நெசவாளர் காலனியில் வசித்து வருவதாகவும், 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

tasmac

சென்னிமலை நகர்புற சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் உள்ள நிலையில், முட்புதர்கள் மற்றும் சுடுகாட்டை தாண்டியே கிராமத்திற்கு செல்ல வேண்டி உள்ளதாகவும், தெருவிளக்கு மற்றும் பேருந்து வசதியும் இல்லாததால் பணிக்கு செல்லும் பெண்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகளும் நடந்தே சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மதுப்பிரியர்கள், இங்குள்ள முட்புதர்களில் அமர்ந்து மது அருந்துவதுடன், அந்த வழியாக செல்லும் பெண்கள், சிறுமிகளிடம் அநாகரிமாக நடந்து கொள்வதாகவும், இதனால் அவர்கள் அச்சத்துடனேயே அந்த பகுதியை செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், ஒட்டபாறை செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அமைய விருப்பதாக தெரியவந்ததாகவும், ஏற்கனவே தெருவிளக்கு, பேருந்து வசதி இல்லாததால் மாலை 6  மணிக்குமேல் பெண்கள் தனியாக செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், குடியிருப்பின் அருகே டாஸ்மாக் அமைத்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே தங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்றும் அந்த மனுவில் கூறியுள்ளனர்.