பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

 
palaru porunthalaru

பழனி அருகேயுள்ள பாலாறு பொருந்தலாறு அணையின் இடதுபுற பிரதான கால்வாயில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக நேற்று அமைச்சர் சக்கரபாணி தண்ணீரை திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணை அமைந்துள்ளது. 65 அடி கொள்ளளவு கொண்ட பாலாறு பொருந்தலாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக விவசாய தேவைக்கு அணையில் தண்ணீரை திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, பாலாறு பொருந்தலாறு  அணையில் இடதுபுற பிரதான கால்வாயில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு, தண்ணீரை திறந்து வைத்தார்.

palaru pornthalar

பாலாறு பொருந்தலாறு  அணையில் இடதுபுற பிரதான கால்வாயில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தினமும் விநாடிக்கு 70 கனஅடி வீதம் 110 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. தண்ணீர் திறப்பின் மூலம் மானூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9,600 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடையும். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் காஜாமுகைதீன் மற்றும் விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.