கோவையில் காரில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலி... ஏடிஜிபி தாமரைக்கண்ணன் நேரில் விசாரணை!
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே இன்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சாலையில் மாருதி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, காரில் இருந்த கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு கார் வெடித்து சிதறியது. இதில் கார் இரண்டு துண்டுகளாக சிதறிய நிலையில், காரில் பயணம் செய்த ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றிலும் தடுப்புகளை அமைத்து யாரும் உள்ளே செல்லாதவாறு தடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற பகுதியை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஏடிஜிபி தாமரை கண்ணன் பேசியதாவது, கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை சிலிண்டர் வெடித்து காரில் வந்தவர் உயிரிழந்த வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இறந்தவர் யார் என்று அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே விபத்து நிகழ்ந்துள்ளதால் கூடுதல் கவனம் செலத்தப்பட்டு வருகிறது. இறந்தவர் யார் என்ற விபரம் முழுமையாக இல்லை. உடல் மிக மோசமாக உள்ளதால் அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவரும்.

இந்து விபத்து தொடர்பாக அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்துள்ளோம். விபத்திற்குள்ளான காரில் சிலிண்டர் இருந்துள்ளது. வேறு என்ன பொருட்கள் இருந்தது என்பது குறித்த ஆவணங்கள் தடயவியல் துறையினர் மூலம் தயார் செய்யப்பட்டு முழுமையாக தெரிவிக்கப்படும். இன்று மாலைக்குள் முழுமையான விசாரணை அறிக்கை தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.
இதனிடையே, காரின் பதிவெண் பொள்ளாச்சியை சேர்ந்தது என தெரியவந்த நிலையில், அதன் அதன் உரிமையாளர் பிரபாகரன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காரை டீலர் ஒருவரிடம் விற்றதாக பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


