திருச்சி அருகே கடன் பிரச்சினையில் மூதாட்டி அடித்துக்கொலை... தம்பதி உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை!

 
murder

திருச்சி அருகே கடன் தகராறில் மூதாட்டி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தம்பதி உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள கடியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவரது மனைவி பட்டு (65). இவர் அதே கிராமத்தை சேர்ந்த உறவினர் பாலசுப்பிரமணியன் என்பரது மனைவி வனிதாவிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வனிதா, ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி வனிதா மற்றும் அவரது குடும்பத்தினர், பட்டுவின் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது.

trichy gh

இதில் வனிதா குடும்பத்தினர் தாக்கியதில் பட்டு பலத்த காயமடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பட்டு பரிதபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் பாலசுப்பிரமணியம், அவரது மனைவி வனிதா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.